அசத்தும்
ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம். என் பெயர் மு. விஜயகுமார். விழுப்புரம் மாவட்டம் ,கள்ளக்குறிச்சிக்கு அருகேயுள்ள
சோமண்டார்குடி அரசு மேல் நிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக
பணியாற்றி வருகின்றேன். இக்குழுவிலுள்ள பலரை போல எனது அரசு ஆசிரியப்பணியை இடைநிலை
ஆசிரியராக 2007 ஆம் ஆண்டு தொடங்கினேன். பள்ளி பருவம் முழுதும் ஆங்கில வழியில் பயின்றும் , ஆங்கில வழிப்பள்ளியில் நான்கு ஆண்டுகள் வேலை செய்தும் , ஒரு மிகப்பெரிய கற்பனையுடன் இரிஷிவந்தியம் ஒன்றியம், கீழ்பாடி
தொடக்கப்பள்ளியில் பணியை தொடங்கினேன். கற்பனையில் சில மட்டும் உண்மையானது
(குழந்தைகள் குழந்தைகளாக இருந்தனர்) பலவை (கற்றல் நிலை, உடை, செயல்கள்) சவாலாகவும் புதுமையாகவும் இருந்தது. முதல் நாளிலிருந்தே, எனது கற்பனைகளை களைந்து, அவர்களுக்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என
முடிவடுத்து இன்று வரை அதை பின்பற்றி வருகின்றேன்.
முதல்
வகுப்பு கொடுக்கப்பட்டது. முதல் நாள் கையில் சுன்னக்கட்டியை எடுத்த நான் ,இரண்டாம் நாள் பள்ளிக்கு ஊசி நூலோடும் , சிறிது
பொத்தான்களையும் வாங்கிக்கொண்டு போனதை என் பெற்றோர் ஆச்சரியமாகவும், மகிழ்வோடும் பார்த்தனர். ஆம்.இரண்டாம் நாளில் எனது முதல் வேலையாக எனது முதல்
வகுப்பு பல குழந்தைகளின் சட்டையில் பொத்தான்களை நானே தைத்தேன். (பல குழந்தைகளின்
சட்டையில் ஒன்று அல்லது இரண்டு பொத்தான்கள் மட்டும் ஊசலாடிக்கொண்டிருந்தது). என்
குழந்தைகளுக்காக "ஏதேனும் நன்மை செய்து கொண்டே இருக்க வேண்டும்" என்ற எண்ணச்சுடர் இன்றளவும் இங்குள்ள ஆசிரியர்களுக்கு உள்ளதைப்போல எனக்கும்
சிறிதும் குன்றாமல் எரிந்து வருகின்றது. குளிக்காமல் வந்த மாணவர்களுக்கு சோப்
வாங்கிக்கொடுத்து குழாய் மூலம் சில ஆசிரியர்களுடன் இணைந்து குளிப்பாட்டிய
அனுபவமும் உண்டு. குழந்தைகளோடு குழந்தையாக
கலந்து விளையாட்டு மூலமும் ,ஆடல் மற்றும் பாடல் மூலமாகவும்
கற்பிக்கத்தொடங்கினேன்.
எனது
பள்ளிக்கு வழங்கப்பட்ட இரண்டு கணினிகள் , கணினி பாகங்களை பொறுத்த ஆள் வரவில்லையென , பெட்டி திறக்கப்படாமல் இருந்து வந்தது. அவற்றை தலைமை ஆசிரியர் அனுமதியுடன்
பொருத்தி(முதற் முயற்சி) பயன்பாட்டுக்கு கொண்டுவந்தேன். சில ஆசிரியர்களும்
ஒத்துழைக்க மாணவர்களுக்கு CD பல வாங்கிவந்தும் கற்றல் நிகழ்வில் பயன்படுத்தினேன்.
இரண்டாம் ஆண்டில் புரஜக்டரும் வழங்கப்படவே, இதற்கென
அட்டவணை தயாரித்து அனைத்து வகுப்புகளுக்கும் பாடம் தொடர்பான படங்கள், வீடியோக்கள் காண்பிக்கப்பட்டது. பல புதிய முயற்சிகள்
மேற்கொண்டு கற்பித்துவந்தேன். முதல் CRC கூட்டதிலேயே கருத்தாளராக
பங்கேற்கும் வாய்ப்பு பெற்று,
இன்று வரை ஒன்றிய , மாவட்ட , மாநில கருத்தாளராக இருந்து வருகின்றேன்.
இரண்டே
ஆண்டுகளில்,
பள்ளிப்பட்டு ஊ. ஒ. நடுநிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி
ஆசிரியராக பதவி உயர்வு பெற்றேன். வருடம் ஒரு பள்ளியில் பணிபுரிந்த எனக்கு ஒரு
திருப்புமுனையாக அமைந்த பள்ளி இது. 5 வருடங்கள் பணிபுரிந்தேன். ஆங்கில பாடத்தை கடினம் என்று
நினைத்த குழந்தைகளுக்கு எளிமையான முறையிலும், விளையாட்டு
முறையிலும் ஆங்கிலத்தை அதுவும் குறிப்பாக ஆங்கில இலக்கணத்தை கற்பிக்கத்
தொடங்கினேன். இதற்கு பக்க பலமாக கணினி சார்ந்த பொருட்கள் பெரிதும் உதவியது. Situational Approach மூலமாக நடத்தவிருக்கும் தலைப்பை ஒட்டிய சூழ்நிலையை ஏற்படுத்திய பிறகே, அன்று நடத்த இருக்கின்ற தலைப்பையே கூறுவேன். பள்ளியை தவிர எதற்கும் வெளியே எந்த போட்டிக்கும் சென்று
கலந்துகொள்ளாத குழந்தைகளை பேச்சு போட்டி, கட்டுரைப்போட்டி,
சதுரங்கம்,
நடனம்,
கலை நிகழ்ச்சி போட்டிகள் என ஒன்றிய அளவிலும், மாவட்ட அளவிலும் கலந்து கொள்ள ஆரம்பித்தனர். 8 ஆசிரியர்கள்
பணிபுரிய வேண்டிய இடத்தில் வெறும் 4 ஆசிரியர்களே பணிபுரிந்து இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தினோம்.
ஊர் தலைவர்,
முக்கியஸ்தர்கள் என பலரின் பார்வை பள்ளி பக்கம்
திரும்பியது. நேரில் பாராட்டிச் சென்றனர் AEEO மற்றும்
பெற்றோர்கள்.
தலைமை
ஆசிரியர் களப்பணி செய்யவில்லை என்றாலும், என் மீதுள்ள நம்பிக்கையால் முழு சுதந்திரம் அளித்தார்.
பெற்றோரின் பார்வையும் பள்ளி பக்கம் திரும்பி நல்ல ஒத்துழைப்பு வழங்கிட, மாணவர் சேர்க்கையும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வந்தது. 1957 ல் ஆரம்பித்த பள்ளியின்
முதல் ஆண்டு விழா மிகவும் சிறப்பான முறையில் , நான்
பணியேற்ற முதல் வருடம் நடந்தது. மேடையில் ஐந்தாயிரம் ரூபாய் பொது மக்கள், நன்கொடையாக
வழங்கினர். எங்கள் வேண்டுகோளை ஏற்று ஊர்
தலைவர் சிறப்பான மேடை அமைத்து கொடுத்தார். பின்னர் தொடர்ச்சியாக ஆண்டு விழாவினை
நடத்தினோம். அறிவியல் ஆசிரியர்
இல்லாத போதிலும் ஒன்றிய அளவிலும், மாவட்ட அளவிலும் அறிவியல் கண்காட்சியில் எனது மாணவர்களை
பங்கேற்க செய்து பல பரிசுகளை வென்றிட வழிகாட்டினேன். பிறகு அனைத்து
காலிப்பணியிடங்களும் நிறம்ப,
சிறப்பான மாற்றங்களை இணைந்து கொண்டுவநதோம்.
பள்ளிக்கு
அருகே என்றும் பூட்டப்பட்ட நூலகத்தை, மாணவர்கள் பயன்படுத்தும் நோக்கில் முயற்சி செய்து, ஒவ்வொரு
வகுப்பிற்கும் வாரம் இரண்டு பாட வேலைகள்
நூலகத்திற்கு ஒதுக்கி,
மாணவர்களை அங்கேயே அழைத்து சென்று, வாசிப்பு
பழக்கத்தை வளர்த்தோம். வீட்டிற்கும் புத்தகங்களை
கொண்டு செல்ல அனுமதி பெற்று, முறையாக பயன்படுத்தினேன். அதிகாரிகளின் பாராட்டும்
கிடைத்தது. பாடங்களை ஒட்டிய களப்பயணம் அதிக அளவில் கூட்டிச்சென்று இயற்கையோடு
இணைந்த கல்விக்கு வழி வகுத்தேன். பல செடிகளை நட்டு மாணவர்களின் பெயர் வைத்து , அதை பராமரித்தோம். English
club, Eco club, Cleanliness club, Hygiene club, Water club, Sports club, First
aid club என பள்ளியின் 5-8 அனைத்து மாணவர்களும்
பங்கேற்கும்படி குழுக்கள் அமைத்து, ஆசிரியர்கள் வழிகாட்டியாக இருந்து செயல்படுத்தினோம்.
இரண்டாம் வருட ஆண்டு விழாவில்(2011)
த.ஆ ஆண்டறிக்கை படிக்க படிக்க , அது தொடர்பான அனைத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்
புரஜக்டர் மூலம் பொதுமக்களுக்கு காண்பித்தேன். இது பெரும் வரவேற்பு, நம்பிக்கை மற்றும் பாராட்டும் பெற்று தந்தது. அவ்வருடம் மாணவர் சேர்க்கை நன்கு
அதிகரித்தது.
தினமும்
வழிப்பாட்டு கூட்டத்தில் 5 ஆங்கில வார்த்தைகள்,
spelling, pronunciation, meaning ஆகியவை முடிந்த வரை உண்மை பொருட்களை காண்பித்து மாணவர்களை
கூற செய்தேன். அந்தவார வெள்ளிக்கிழமை மதிய
வேளையில் English
club members சிறுதேர்வு வைப்பார்கள். 25 /25
பெறுபவர்களுக்கு என் செலவில் பென்சில், பேனா,
அளவுகோல் போன்றவை திங்கள் பொது வழிப்பாட்டுக்கூட்டத்தில்
பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக எடுக்கும் மாணவர்களுக்கு ஆண்டு விழாவில்
பரிசளிக்கப்படுவார்கள். சிறந்த club
ஆக தேர்ந்தெடுக்கப்படுவோர்க்கு கோப்பை வழங்கப்படும். NMMS தேர்வில் மாணவர்களை பங்கேற்கச்செய்து இதுவரை பத்து மாணவர்கள் (நான்கு ஆண்டுகளில்) வெற்றி
பெற்றுள்ளனர். இவ்வெற்றிக்கு பின்னர் CRC அளவில் வகுப்பு நடத்தினோம். பெயரளவில்
இல்லாமல் JRC
counselor ஆகவும் ,
ஒன்றிய கன்வினியராகவும்
சிறப்பாக செயல்பட்டு பல அதிகாரிகளின் பாராட்டும் பெற்றேன். என்னை ஒரு ஆங்கில, அறிவியல்,
நடன,
நாடக,
உடற்கல்வி,
கணினி,
கலை ஆசிரியராக மெருகேற்றியது இப்பள்ளிதான்.
இச்சமயத்தில்
தொடக்ககல்விதுறையிலிருந்து ,
பள்ளிக்கல்வித்துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதலில், சோமண்டார்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்தேன். இங்கும் எனது வகுப்பறை
செயல்பாடுகளில் ICT
கருவிகளை இணைத்து கற்பித்து கொண்டிருக்கின்றேன்.
பயன்படுத்தப்படாத புரஜக்டர் பயன்பாட்டுக்கு வந்தது. பள்ளி மடிக்கணினி பெறுவதில்
ஒரு சில சங்கடம் ஏற்படவே ,
எனக்கென்று ஒன்றை 40,000 செலவில்
வாங்கினேன். இன்னும் சில காரணங்களால்
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உதவியால் புரஜக்டர் மற்றும் டேப்லட் ஆகியவை
புதியதாக வாங்கப்பட்டு பயன்பாட்டில்
இருக்கின்றது. நடுநிலைப்பள்ளியில் கிடைத்த சுதந்திரம், ஆசிரியர்கள்
&
தலைமை ஆசிரியர்
ஒத்துழைப்பு இங்கு கிடைக்கவில்லை. எனினும் இந்த ஒரு வருடத்தில் பல
மாற்றங்களை மெதுவாக செய்து கொண்டு வருகின்றேன். ரோட்டரி சங்கம் உதவியுடன் ஒரு
லட்சம் மதிப்புள்ள நீர் சுத்திகரிப்பு கருவி பொருத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. Waste management மையபடுத்தி RECYCLE
- REPRODUCE - REUSE ஆகியவற்றை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி
வருகின்றேன்.
இப்பள்ளியில் பணியாற்றிய
சமயத்தில் தான் முகநூல் வாயிலாக பல நண்பர்கள் நட்பு ஏற்பட்டது. என் மாவட்ட திலீப்
அவர்களின் அறிமுகம் வாயிலாக SCERT
நடத்திய முதல் flash animation workshop ல்
கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த பணிமனையில் தான் , பல சாதனை
ஆசிரியர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. (திருவாளர்கள்: திலீப், ஆசிர்,
சித்ரா ,
பெர்ஜின்,
உமா ,கருனைதாஸ்,அன்பழகன் சத்தியவேல், சினுவாசன்... இன்னும் பலர்) list
ரொம்ப பெரியது. இந்த வாய்ப்பு ஐ.சி.டி யில் என்னை அடுத்த
நிலைக்கு கொண்டு செல்ல காரணமாக
இருந்தது. பல விஷயங்களை தெரிந்து கொண்டு
அடுத்த நிலைக்கு தயாரானேன். மாணவர்களுக்கு நன்மை பயக்கும் எண்ணற்ற கணினி
செயல்பாடுகளை வகுப்பறையில் செய்ய தொடங்கினேன். அதற்கான விளைவுகளும் நன்றாகவே
இருந்தது.
அடுத்த
கட்டமாக நண்பர் திலிப் அமைத்தது போல ஒரு சிறப்பான ICT Smart class (smart board
enabled) அமைக்கும் நோக்கில் முயற்சி செய்து வருகின்றேன். இங்கேயும் NMMS தேர்வை இதுவரை எதிர்கொள்ளாத சுழலில், சென்ற வருடம் மாணவர்களை தயார் செய்தேன். ஒரு மாணவி தேர்ச்சி பெற்றுள்ளார். NTSE (for X) தேர்வும் எழுதி முடிவிற்காக காத்திருக்கின்றனர். இப்பள்ளிக்கு கற்பித்தல்
பயிற்சி மேற்கொள்ளவரும் ஆசிரிய பயிற்சி மாணவர்களுக்கு சென்ற ஆண்டு முதல் சிறப்பு
பயிற்சியும்,
ICT கருவிகளை பயன்படுத்துதல், கையாளுதல்
போன்றவற்றில் நாளைய ஆசிரியர்களுக்கு இப்போதே தலைமை ஆசிரியர் ஒப்புதலோடு பயிற்சி
அளித்து வருகின்றேன்.
இறுதியாக, ICT National
awards 2015 தமிழக ஆசிரிய குழுவினர் அறுவரில் ஒருவராக
தேர்ந்தெடுக்கப்பட்டு புது டெல்லி சென்று கடந்த டிசம்பர் இறுதியில் சென்று Presentation முடித்து, ,முடிவிற்காக காத்திருக்கின்றேன். என்னை மேலும் மேலும் மெருகேற்றி கொள்ள
அனைத்து வகையிலும் உறுதுணையாக இருக்கும் எனது நண்பர் திலீப் அவர்களுக்கு
இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் சாதனை ஆசிரியர்களுக்கு
மத்தியில் எனக்கு இவ்வாய்ப்பினை வழங்கிய சகோதிரி உமா அவர்களுக்கும் , கோபால் அவர்களுக்கும் நன்றி…